பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவுக்காகபந்தல் அமைக்கும் பணி தீவிரம்
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவுக்காக பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சத்தியமங்கலம்
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவுக்காக பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குண்டம் திருவிழா
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, அரசு விடுமுறை நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இதுதவிர ஆண்டுதோறும் இந்த கோவிலில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழாவுக்காக வருகிற 20-ந் தேதி பூச்சாட்டப்படுகிறது. தொடர்ந்து 28-ந் தேதி கம்பம் நடப்படுகிறது.
வீதி உலா
மேலும் பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் உற்சவ சிலைகளை சப்பரங்களில் வைத்து சுமார் 100 கிராமங்கள் வழியாக திருவீதி உலாவாக செல்வார்கள். அப்போது அந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், அம்மன்களை வழிபடுவார்கள். அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி அதிகாலை நடைபெறுகிறது.
தொடர்ந்து 5-ந் தேதி திருவிளக்கு பூஜையும், 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ந் தேதி தங்க தேர் இழுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ந்தேதி நடக்கும் மறுபூஜையுடன் கோவில் திருவிழா முடிவடைகிறது.
பந்தல் அமைக்கும் பணி
குண்டம் திருவிழாவை காண வரும் பக்தர்கள் வசதிக்காகவும், அதிக அளவில் வெயில் படாமல் இருக்கவும் கோவிலில் கடந்த 10-ந் தேதி முதல் பந்தல்கால் நடும் பணி தொடங்கியது. கோவில் வளாகம் முழுவதும், தெப்பக்குளம் மற்றும் ராஜன் நகர் செல்லும் வழிகளில் பக்தர்கள் நின்று வருவதற்கு ஏற்ப பிரமாண்டமான ராட்சத பந்தல் போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
தீ விபத்து எதுவும் ஏற்படாமல் இருக்க ஓலைகள் இல்லாமல் தகரத்தினால் ஆன சீட்டுகளை மேலே வைத்து பந்தல் போடப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை ேகாவில் செயல் அலுவலர் மேனகா மற்றும் பணியாளர்கள், பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகிறார்கள்.