ஈரோடு சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
ஈரோடு சின்ன மாரியம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஈரோடு சின்ன மாரியம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம்
ஈரோடு மாநகர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இந்த கோவில் மற்றும் சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் நடப்பட்ட கம்பங்களுக்கு தினமும் பக்தர்கள் புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள். திருவிழாவையொட்டி காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் குண்டம் விழா நடந்தது.
இந்தநிலையில் சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலில் இருந்து தொடங்கிய தேரோட்டம் பெரியார் வீதி, பொன் வீதி வழியாக அக்ரஹாரம் வீதிக்கு சென்றது. அங்கு பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை வழிபட்டனர்.
திருவீதி உலா
இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு மீண்டும் புறப்படும் தேர் பல்வேறு வீதிகள் வழியாக அசைந்தாடி காரை வாய்க்கால் பகுதிக்கு சென்று நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து நாளை (வெள்ளிக்கிழமை) பகலில் புறப்பட்டு மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலுக்கு தேர் நிலை வந்தடைகிறது. இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன், 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கு திருவீதி உலா நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு கம்பம் பிடுங்கும் விழாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. இதில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் இருந்து பிடுங்கப்படும் கம்பங்கள் மணிக்கூண்டு பகுதிக்கு எடுத்து வரப்படும். அங்கிருந்து ஈரோடு மாநகரில் முக்கிய சாலைகளில் கம்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காலிங்கராயன் வாய்க்காலில் விடப்படும். 9-ந் தேதி நடைபெறும் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.