பங்குனி உத்திர விழா: ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு- பால் குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
பங்குனி உத்திர விழாவையொட்டி ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பங்குனி உத்திர விழாவையொட்டி ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பங்குனி உத்திரம்
பங்குனி உத்திர விழாவையொட்டி நேற்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோவிலில் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவையொட்டி திண்டல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காலையில் இருந்தே பால் குடம், தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தார்கள்.
காவடி சுமந்து கொண்டும் பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் காலையில் இருந்தே குவிந்தனர். இதனால் திண்டல் மலையின் படிக்கட்டுகளில் மிக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மூலவர் ராஜ அலங்காரத்திலும், உற்சவர் வள்ளி-தெய்வானையுடன் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பாலமுருகன் கோவில்
இதேபோல் ஈரோடு பாப்பாத்திக்காடு பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி ஈரோடு காவிரிக்கரையில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அப்போது பக்தா்கள் பலர் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஈரோடு இடையன்காட்டுவலசு பாலதண்டாயுதபாணி கோவில், காசிபாளையம் முருகன் கோவில் உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.