அந்தியூர் அருகே சொக்கநாச்சி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா; ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்
அந்தியூர் அருகே சொக்கநாச்சி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே சொக்கநாச்சி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
அம்மை அழைத்தல்
அந்தியூர் அருகே வேம்பத்தியில் மிகவும் பழமையானதும், புகழ் பெற்றதுமான சொக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து கொடியேற்றப்பட்டது.
பின்னர் கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்தை சுற்றி இளைஞர்கள் ஆடி வருகிறார்கள். பெண்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபடுகிறார்கள். நேற்று முன்தினம் அம்மை அழைத்தல், வாக்கு கேட்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.
குண்டம் இறங்கினர்
அதைத்தொடர்ந்து குண்டம் விழா நடந்தது. முதலில் பூசாரி 60 அடி நீளமுடைய குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து வெள்ளை மற்றும் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்த ஏராளமான பக்தர்கள் பிரம்பில் சுற்றிய பூவை கையில் வைத்துக்கொண்டு தீ மிதித்தனர்.
நேற்று பொங்கல் விழா நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. திருவிழாவில் அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், வேம்பத்தி, ஜம்பை, பவானி, கவுந்தப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.