அந்தியூர் அருகே விளையாட்டு மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா- சிறுவர்கள் மட்டும் தீ மிதித்தனர்
அந்தியூர் அருகே விளையாட்டு மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. சிறுவர்கள் மட்டும் தீ மிதித்தனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே விளையாட்டு மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. சிறுவர்கள் மட்டும் தீ மிதித்தனர்.
பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையம் கிழக்குக்காடு பகுதியில் மிகவும் பழமையானதும், புகழ்பெற்றதுமான விளையாட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். குண்டத்தில் 6 வயது முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் மட்டும் தீ மிதிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து குண்டம் இறங்கும் சிறுவர்கள் 3 நாட்கள் விரதத்தை தொடங்கினார்கள். மேலும் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வந்தன.
சிறுவர்கள் தீ மிதித்தனர்
இதையடுத்து கோவில் முன்பு 40 அடி நீளத்தில் குண்டம் தயார் செய்யப்பட்டது. பின்னர் நேற்று காலை அம்மனிடம் வாக்கு கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்னர் அருகே உள்ள கிணற்றில் இருந்து குடத்தில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இந்த தீர்த்தக்குடம் ஒன்று ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
பின்னர் தீர்த்தத்தால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுவர்கள் உடல் முழுவதும் விபூதி பூசிக்கொண்டு, அரளிப்பூவை தலையில் சுற்றிக்கொண்டும் கையில் பிரம்புடன் பயபக்தியுடன் ஒருவர் பின் ஒருவராக குண்டம் இறங்கினார்கள். 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், பக்தி கோஷம் எழுப்பினார்கள். அதைத்தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வந்து அம்மனை வழிபட்டனர். திருவிழாவில் அந்தியூர் மற்றும் செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.