கதித்தமலை வெற்றிவேலாயுதசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா
ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா நாளை கதித்தமலையில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கதித்தமலை
ஊத்துக்குளியில் மிகவும் பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச தேர் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கதித்தமலையில் கொடியேற்றம் நாளை (சனிக்கிழமை) காலை நடைபெற உள்ளது.முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை கணபதி ஹோமம், கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடைபெறும். மலைக்கோவிலில் கொடியேற்றத்தை தொடர்ந்து மாலை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.
நாளை மறுநாள்முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். அடுத்த மாதம் 1-ந் தேதி மாலை சுவாமி மயில்வாகன காட்சி உலா நடைபெறும்.
அடுத்த மாதம் 4-ம் தேதி காலை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறும். 5-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் நிலை தேர்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். 6-ந் தேதி பரிவேட்டை நடைபெறும். 7-ந் தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சுவாமி உலா காட்சி நடைபெறும்.
மலைத்தேரோட்டம்
அடுத்த மாதம் 8-ந் தேதி காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணம் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.அன்று இரவு மஹா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்.அடுத்த மாதம் 9-ம் தேதி வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா உடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.