கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை வேலைஉறுதி திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் முற்றுகை


கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை வேலைஉறுதி திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 9:03 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை வேலைஉறுதி திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

எட்டயபுரம் அருகே கோடாங்கிபட்டி கிராமத்திலுள்ள ஊருணியில் தூர்வாரும் மண்ணை நிலங்கள் பாதிக்காத வகையில் அப்புறப்படுத்த கோரி நேற்று வேலைஉறுதி திட்ட பணியில் ஈடுபடும் பெண்கள் கோவில்பட்டி யூனியன் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

எட்டயபுரம் அருகே மஞ்சநாயக்கன்பட்டி பஞ்சாயத்து கோடாங்கிபட்டி கிராமத்தில் வேலை உறுதி திட்டப்பணியில் ஈடுபடும் பெண்கள், பஞ்சாயத்து துணை தலைவர் சசிகுமார் தலைமையில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இக் கிராமத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் 95 பேருக்கு பணி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஊருணியை தூர்வாரும் பணி வேலை உறுதி திட்டத்தில் நடந்து வருகிறது. தற்போது 2½ அடி ஆழம் வரை தூர்வாரப்பட்ட நிலையில், அங்கிருந்து எடுக்கப்பட்ட மண்ணை கொண்டு ஊருணியின் கரைகள் பலப்படுத்தப் பட்டுள்ளது. இன்னும் 2½அடி ஆழம் தூர்வார வேண்டும். அப்படி தூர்வாரினால், அதிலிருந்து எடுக்கப்படும் மண்ணை ஊருணி கரைகளில் வைத்தால், அருகே உள்ள மானாவாரி நிலங்கள் பாதிக்கப்படும். இதனை வெளியே எடுத்துச் செல்ல டிராக்டர் வேண்டும். அதற்கு அரசின் அனுமதி வேண்டும். ஆனால், மண்ணை எடுத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதி தராததால் அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அவர்களிடம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ஊருணியில் தூர்வாரும் போது எடுக்கப்படும் மண், அதன் கரைகளை சீரமைக்கவே பயன்படுத்த வேண்டும்.

அதனை வெளியே எடுத்துச் சென்று மற்ற பணிகளுக்கு பயன்படுத்த உதவி கலெக்டர் அல்லது மாவட்ட கலெக்டரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

ஆழ்துளை கிணறு, அடிபம்புகள் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும். வேலை உறுதி திட்டத்தில் ஊதியம் முறையாக வழங்கப்படும், என தெரிவித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story