காரைக்குடி அருகே மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கேட்டு வழக்கு - அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
காரைக்குடி அருகே மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கேட்ட வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தளக்காவூர் மரியசெல்வராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்தநிலையில் எங்கள் கிராமத்தில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்த முடிவு செய்தோம். அதற்கு அனுமதி கேட்டபோது, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான பட்டியலில் எங்கள் ஊர் இடம் பெறவில்லை என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எங்கள் கிராமத்தை போல ஏராளமான கிராமங்களில் பல ஆண்டுகளாக மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. ஆனால் அந்த கிராமங்கள் அனுமதி பட்டியலில் இல்லை. இருந்தபோதும் உரிய கோரிக்கைகளின் அடிப்படையில் அந்த கிராமங்களின் பெயர்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் எங்கள் கிராமத்தையும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தும் ஊர்களுடன் சேர்த்து அரசாணை பிறப்பிக்கவும், எங்கள் கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து கால்நடைத்துறை செயலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.