கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்; கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ண ஜெயந்தி விழா
கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், கிருஷ்ணகிரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடந்தது.
காலை துளசி பூஜை, சந்தியா ஆரத்தி, கலை நிகழ்ச்சி, சொற்பொழிவு, உரியடி, அபிஷேகம், மஹா மங்கள ஆரத்தி, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தது. இதில், சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்து சாமியை வழிபட்டனர்.
வீடுகளில் வழிபாடு
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணகிரி பழையபேட்டை கிருஷ்ணர் கோவில், லட்சுமி நாராயண சாமி கோவிலில், கிருஷ்ணருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் சரி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வேணுகோபால சாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதில் குழந்தைகள் ராதை, கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்தனர். இதே போல வீடுகளில் பக்தர்கள் கிருஷ்ணர் படத்திற்கு சீடை, முறுக்கு, வெண்ணெய் படைத்து வழிபட்டனர். மேலும் குழந்தைகளுக்கு ராதை, கிருஷ்ணர் வேடம் அணிவித்து மகிழ்ந்தனர்.
சர்வ தரிசனம்
ஓசூர் கோகுல் நகர் அருகே ரங்கோ பண்டித அக்ரஹாரத்தில் உள்ள சத்யா, பாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அதிகாலையில், சாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தோமாலை சேவை, உற்சவர் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதைத்தொடர்ந்து சர்வ தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து நடனம் ஆடினர். இதேபோல், ஓசூர்-பாகலூர் ரோடு சர்க்கிள் அருகே உள்ள கிருஷ்ணசாமி கோவில், வாணியர் தெருவில் உள்ள வேணுகோபால சாமி கோவில் உள்ளிட்ட கிருஷ்ணர் கோவில்களிலும் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
வெண்ணெய்க்காப்பு அலங்காரம்
பர்கூரை அடுத்த குமரங்கனப்பள்ளி கோகுல் நகரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கிருஷ்ணர் வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கோவிலுக்கு அழைத்து வந்தனர். இதில் குமரங்கனப்பள்ளி, மல்லப்பாடி, சிகரலப்பள்ளி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேன்கனிக்கோட்டையில் அஞ்செட்டி சாலையில் உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் கிருஷ்ணஜெயந்தியையொட்டி நேற்று கிருஷ்ணர் மற்றும் பலராமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காலை 7:30 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து துளசி பூஜை, சந்தியா ஆரத்தி, மகா அபிேஷகம், கலை நிகழ்ச்சி, சொற்பொழிவு, உரியடி, மங்க ஆரத்தி, பிரசாத வினியோகம் நடந்தது.