கருவேலங்காடாக மாறிய கிருஷ்ணாபுரம் ஏரி-சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கருவேலங்காடாக மாறிய கிருஷ்ணாபுரம் ஏரி-சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

புதர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கி கருவேலங்காடாக காட்சி அளிக்கும் கிருஷ்ணாபுரம் ஏரியை தூர்வாரி சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

தர்மபுரி

மழைநீர் தேங்கவில்லை

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றாக இருப்பது கிருஷ்ணாபுரம் ஏரி. தர்மபுரி-திருப்பத்தூர் சாலையை ஒட்டி கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியில் மழைநீர் தேங்கும் போது சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவது வழக்கம்.

இதே போல் இந்த ஏரி நிரம்பும்போது சில கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் விவசாய பணிகள் செழிப்படையும் நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏரியில் முள் செடிகள், கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் அடர்ந்து வளர தொடங்கின. இவை தற்போது இந்த ஏரியில் தண்ணீர் தேங்கும் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்து விட்டன.

தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை கணிசமாக பெய்து உள்ளதால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஆனால் இந்த ஏரியில் குறிப்பிடத்தக்க அளவில் மழைநீர் தேங்கவில்லை.

தற்போது முட்புதர்கள் அடர்ந்து கருவேலங்காடாக காட்சி அளிக்கும், இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும். இந்த ஏரியில் அடர்ந்து வளர்ந்துள்ள முள் செடிகள் புதர்களை அகற்றி ஏரியை தூர்வார வேண்டும் என்று சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இது தொடர்பாக கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீரமைக்க வேண்டும்

விவசாயி ஆறுமுகம்:-

கிருஷ்ணாபுரம் ஏரியில் மழை நீர் தேங்கும் போது சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் நன்றாக நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏரியில் பெரும் பகுதியை புதர்கள் ஆக்கிரமித்து வளர்ந்து விட்டன. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து உள்ளதால் பெரும்பாலான ஏரிகளில் கணிசமாக தண்ணீர் தேங்கி உள்ளது. பஞ்சப்பள்ளி அணையின் உபரிநீரும் கால்வாய்கள் மூலம் பல்வேறு ஏரிகளுக்கு வந்துள்ளது. தும்பல அள்ளி அணை உபரிநீர் கிருஷ்ணாபுரம் ஏரிக்கு வருவது வழக்கம். ஆனால் கிருஷ்ணாபுரம் ஏரிக்கு இப்போது மழைநீர் குறிப்பிடத்தக்க அளவில் வரவில்லை. எனவே இந்த ஏரியின் மூலம் பாசன வசதி பெறும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும். தும்பல அள்ளி அணை உபரி நீர் கிருஷ்ணா புரம் ஏரிக்கு வந்து சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.

விவசாய பணிகள் பாதிப்பு

சமூக ஆர்வலர் ஆசைபாஷா:-

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான கிருஷ்ணாபுரம் ஏரியில் கடந்த சில ஆண்டுகளாக மழை நீர் குறிப்பிடத்தக்க அளவில் தேங்கவில்லை. ஏரியின் முழு பரப்பையும் முள் செடிகளும் புதர்களும் ஆக்கிரமித்து உள்ளன. இந்த நிலையில் நடப்பாண்டில் பருவமழை கணிசமாக பெய்த போதும் இந்த ஏரிக்கு வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் வரவில்லை. இதனால் இந்த பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகளில் தற்போது கணிசமாக தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே இந்த ஏரியில் உள்ள புதர்களை அகற்றி தூர்வாரி சீரமைக்க வேண்டும். இந்த ஏரியில் தும்பலஅள்ளி அணையின் உபரிநீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story