ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குவா, குவா
மங்கலம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
திருவண்ணாமலையை அடுத்த கீழ்பென்னாத்தூர் சாமந்தியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி ஆதிலட்சுமி (வயது 27),
நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டனர்.
உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் சென்றது. ஆம்புலன்சை அன்பழகன் என்பவர் ஓட்டினார். மருத்துவ உதவியாளராக செல்வி பணியில் இருந்தார்.
ஆதிலட்சுமியை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது. மங்கலம் அருகே செல்லும்போது ஆதிலட்சுமிக்கு பிரசவ வலி அதிகமானது.
இதனால் அவருக்கு பிரசவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தினர். தொடர்ந்து ஆதிலட்சுமிக்கு செல்வி பிரசவம் பார்த்தார்.
காலை 650 மணி அளவில் ஆதிலட்சுமிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர்கள் சேர்க்கப்பட்டனர்.
அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.