தந்தையின் குடிப்பழக்கத்தால் குடியாத்தம் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


தந்தையின் குடிப்பழக்கத்தால் குடியாத்தம் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

தந்தையின் குடிப்பழக்கத்தால் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.

வேலூர்

குடியாத்தம்

தந்தையின் குடிப்பழக்கத்தால் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.

மாணவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ராஜாகுப்பம் ஊராட்சி சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு, கூலி தொழிலாளி. இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், பிரகாஷ் (வயது 17) என்ற மகனும், விஷ்ணுபிரியா (16) என்ற மகளும் உள்ளனர்.

பிரகாஷ் பிளஸ்-2 முடித்துள்ளார். விஷ்ணுபிரியா தற்போது நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.

பிரபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது குடும்பம் மகிழ்ச்சி இல்லாமல் இருந்துள்ளது. இரவு என்றாலே வீட்டில் சண்டை, சச்சரவாக இருந்துள்ளது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் இன்று காலை பிரபு கூலி வேலைக்கு சென்றுவிட்டார். பிரகாஷ் வெளியே சென்று இருந்தார். கற்பகம் 100 நாள் வேலைக்கு சென்றிருந்தார்.

மதியம் வீட்டிற்கு கற்பகம் வந்து பார்த்தபோது வீட்டில் தூக்குப்போட்டு கொண்ட நிலையில் விஷ்ணுபிரியா இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விஷ்ணுபிரியாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடிதம் சிக்கியது

இதனைத்தொடர்ந்து வீட்டில் பார்த்தபோது விஷ்ணுபிரியா எழுதிய உருக்கமான கடிதம் இருந்தது.

அதில் என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்தவும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும் என எழுதி இருந்தார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி குறித்து ராஜாகுப்பம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான பி.ஹெச்.இமகிரிபாபு கூறியதாவது-

சாதனை மாணவி

மாணவி விஷ்ணுபிரியா ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 5 வருடங்கள் தொடர்ச்சியாக பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்தார்.

அதுமட்டும் இல்லாமல் ஆங்கில பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் தொடர்ந்து பரிசுகளை பெற்றவர்.

9-ம் வகுப்பு குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கேயும் சிறப்பாக படித்து 10-ம் வகுப்பில் 410 மதிப்பெண்கள் பெற்றார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் மூலமாக கிராமப்புற மாணவர்களை விமானம் மூலம் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியில் மாணவி விஷ்ணுபிரியா தேர்வு செய்யப்பட்டு எங்கள் உதவியுடன் சென்னை சென்று விமானத்தில் சுற்றி வந்தவர்.

சாதனை மாணவியாக திகழ்ந்தவர் இன்று உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என கண்ணீர் மல்க கூறினார்.

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Related Tags :
Next Story