சாதனை படைத்த தமிழக அணியினருக்கு பாராட்டு
தென்னிந்திய ரோல்பால் போட்டியில் சாதனை படைத்த தமிழக அணியினருக்கு பாராட்டு விழா நடந்தது.
11 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்ற தென்னிந்திய அளவிலான 4-வது ரோல்பால் போட்டி கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. தமிழக அணியில் திண்டுக்கல், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 24 பேர் இடம்பெற்றிருந்தனர்.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக ஆண்கள், பெண்கள் அணியினர் கேரள அணியுடன் நேற்று முன்தினம் மோதினர். பரப்பரப்பாக நடந்த ஆட்டத்தின் இறுதியில் கேரள அணிகள் முதலிடத்தை பிடித்தது. 2-வது இடத்தை தமிழக அணி வீரர்-வீராங்கனைகள் கைப்பற்றினர். சாதனை படைத்த தமிழக அணியினர் சின்னாளப்பட்டிக்கு நேற்று வந்தனர். இவர்களுக்கான பாராட்டு விழா அங்குள்ள ராஜன் உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.
விழாவில் ரோல்பால் சங்கத்தின் தென்னிந்திய செயலாளர் சுப்பிரமணி, தமிழ்நாடு ரோல்பால் சங்க மாவட்ட தலைவரும், சர்வதேச நடுவருமான பிரேம்நாத், தமிழ்நாடு ரோல்பால் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் மதுமிதா, இணைச்செயலாளர் கண்மணி, மூத்த பயிற்சியாளர்கள் ராஜசேகர், பிரதீப், தீபக், அணி மேலாளர்கள் காயத்ரி, தங்கலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வீரர்-வீராங்கனைகளை பாராட்டினர். முன்னதாக சின்னாளப்பட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கில் தமிழக அணியினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.