நஞ்சராயன்குளத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்த நடவடிக்கை'


நஞ்சராயன்குளத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்த நடவடிக்கை
x
திருப்பூர்


பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நஞ்சராயன் குளத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

பறவைகள் சரணாலயம்

திருப்பூரில் பறவைகள் சரணாலயமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நஞ்சராயன் குளத்தை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது குளத்தை சுற்றி தங்கி வரும் வெளிநாட்டு பறவைகள் உள்பட குளத்தின் சிறப்பம்சத்தை நுண்ணோக்கி மூலமாக அமைச்சர் பார்வையிட்டார். மேலும் பறவைகள் சரணாலயத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், அதை பொழுதுபோக்கு அம்சமாக மாற்றும் திட்டம் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

திருப்பூர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி, திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், கவுன்சிலர்கள் ராஜன், யுவராஜ், தி.மு.க. பாண்டியன்நகர் பகுதி செயலாளர் ஜோதி உள்பட வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

ரூ.7½ கோடி நிதி

பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

திருப்பூர் அருகே உள்ள நஞ்சராயன் குளத்தை 17-வது சரணாலயமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இதற்காக ரூ.7½ கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நஞ்சராயன் என்ற மன்னரால் 400 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட குளம் இதுவாகும். இந்த பகுதி கிட்டத்தட்ட 125 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகவும், சர்க்கார் பெரியபாளையம், நெருப்பெரிச்சல் ஆகிய 2 கிராமங்களுக்கு உள்பட்டதாகவும் உள்ளது. இதுவரை இங்கு 186 வகை பறவைகள் வந்து செல்வதுடன், ஏராளமான பறவைகள் இங்கு எப்போதும் இருக்கின்றன.

இந்த ரூ.7½ கோடி நிதிமட்டுமின்றி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட பல்வேறு தனியார் அமைப்புகளும் நிதி தந்து உதவுவதாக தாங்களாகவே முன்வந்து அறிவித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சியும் 'நமக்கு நாமே' திட்டத்தின் மூலம் விரிவாக செய்ய முடியும் என்று கூறி உள்ளது.

சுற்றுலா தலமாக...

நஞ்சராயன் குளத்தை சுற்றுலா தலமாகவும், பள்ளி மாணவர்களுக்கு நல்லதொரு அறிவு புகட்டும் இடமாகவும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நஞ்சராயன் குளத்தை ஒட்டி குறைந்த விலைக்கு விற்கப்பட்ட நிலத்தை பறவைகள் சரணாலயத்துக்காக கையகப்படுத்த தமிழக அரசின் கவனத்துக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மரக்கன்று வழங்கும் திட்டத்திற்கான வாகனத்தை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இதேபோல் விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் வழங்கினார்கள்.


Next Story