பாசன உபரி நீரால் நிரம்பிய குளம்
புதுப்பாளையம் குளம் வடகிழக்கு பருவமழை, பாசன உபரி நீரால் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
குளம் நிரம்பியது
குடிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர பி.ஏ.பி பாசனம் மூலம் மக்காச்சோளம் கொண்டக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.
குடிமங்கலம் பகுதியில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட குளம்,குட்டைகள், தடுப்பணைகள் உள்ளன. குடிமங்கலம் பகுதியில் பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஒரு சில குளங்களில் குறைந்த அளவு தண்ணீர் உள்ளது.
நிலத்தடி நீர்மட்டம்
குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளச்சாகுபடி அதிக அளவு நடைபெற்று வருகிறது. மக்காச்சோள சாகுபடிக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது என்பதால் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் உபரி நீர் காரணமாக சில குளங்கள் நிரம்பி உள்ளது. புதுப்பாளையம் குளம் வடகிழக்கு பருவமழை மற்றும் பாசன உபரி நீரால் நிரம்பி உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
குடிமங்கலம் சுற்று வட்டார பகுதியில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். தென்னை நீண்ட காலப்பயிர் என்பதால் கிணற்றுப்பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது இது தவிர தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை என காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். புதுப்பாளையம் குளம் நிரம்பி உள்ளதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.