குள்ளாயி அம்மன் கோவில் திருவிழா
குள்ளாயி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
தோகைமலை அருகே சின்னையம்பாளையத்தில் 8 பட்டி கிராம பொதுமக்களுக்கு பாத்தியபட்ட குள்ளாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி குளித்தலை காவிரியில் ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இரவு ஓணாப்பாறையில் குள்ளாயி அம்மனுக்கு கரகம் பாலித்தனர். தொடர்ந்து காவல் தெய்வம் முன்செல்ல குள்ளாயி அம்மனின் கரகம் குதிரையில் வைக்கப்பட்டு தாரை தப்பட்டை முழங்க வாணவேடிக்கையுடன் வீதி உலா வந்து கோவில்களில் குடி புகுந்தது. தொடர்ந்து பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும், கிடா வெட்டியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் தேவராட்டம், படுகளம் விழுதல், சரம்குத்துதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் பெண்கள் முளைப்பாரிகளுடன், கோவில் முன்பாக நட்டு இருந்த கம்பத்தை எடுத்து கொண்டு கோவில் கிணற்றுக்கு வந்தனர். கோவில் கிணற்றில் கம்பம் விடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.