குமார கோவில் திருமண மண்டபம் சீரமைக்கப்படும்
குமாரகோவில் திருமண மண்டபம் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
தக்கலை:
குமாரகோவில் திருமண மண்டபம் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று குமரி மாவட்டம் வந்தார். அவர் மண்டைக்காடு கோவில் வளாகம், பக்தர்கள் பொங்கலிடும் பகுதி, சமய மாநாடு திடல் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு வந்த அவர் கோவிலில் சாமிதரினம் செய்தார்.
பிரகாரங்களை சுற்றி வந்தபின் கோவிலுக்கு என்ன தேவைகள் இருக்கிறது? தேர் நல்ல நிலையில் உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்து கிடப்பதாகவும், அதனை சரிசெய்து தரவேண்டும் எனவும் ஊர் பிரமுகர்கள் கோரிக்கை வைத்தனர்.
திருமண மண்டபம்
அதைத்தொடர்ந்து அவர் கோவில் வெளிபுறத்தின் மேற்கு பகுதியில் உள்ள சேதமடைந்த கட்டிடத்தை பார்வையிட்டார்.
அதன்பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடந்து வரும் திருப்பணிகளை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்துவதற்காக வந்தேன். பணிகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் 24, 25, 26-ந் தேதிக்குள் நிறைவு பெற்றுவிடும். திருப்பணிகள் முடிந்த பிறகு திருக்கோவில் திருவிழா நடைபெறும். இதுபோல் இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு அமைந்திருக்கிற குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு வந்துள்ளேன். இந்த திருக்கோவிலில் வைத்து அதிகபடியான திருமணங்கள் நடப்பதால், ஏற்கனவே திருமண வீட்டார் பயன்படுத்தி கொண்டிருந்த திருமண மண்டபத்தின் அறைகள், சமையல் கூடம் முழுவதும் சிதலமடைந்து காணப்படுகிறது. இதனை முழுமையாக புனரமைப்பதா? அல்லது புதிய திருமண மண்டபம் கட்டுவதா? என்பது குறித்தும் இருக்கிற அறைகளை புதுப்பிப்பது மற்றும் இதனை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக வல்லுனர்களை வைத்து ஆய்வு மேற்கொள்ள சொல்லியிருக்கிறேன். அந்த வல்லுனர்கள் குழு 10 நாட்களில் ஆய்வறிக்கையை தருவதாக சொல்லியிருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புதிய திருமண மண்டபம், சுற்றுச் சுவர், சமையல் கூடம், உணவு அருந்தும் அறை ஆகியவற்றை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர், கோவில் மேலாளர்கள் செந்தில்குமார், சுதர்சன குமார் மராமத்து பொறியாளர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.