காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கு; 2 மாதங்களில் 10 முறை கொல்ல முயன்றேன் - காதலி பரபரப்பு வாக்குமூலம்


காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கு; 2 மாதங்களில் 10 முறை கொல்ல முயன்றேன் - காதலி பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 9 Nov 2022 12:03 PM IST (Updated: 9 Nov 2022 12:25 PM IST)
t-max-icont-min-icon

2 மாதங்களில் காதலன் சரோனை 10 முறை கொல்ல முயன்றதாக காதலி க்ரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

குமரி,

கேரள மாநிலம் மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். குமரி மாவட்டம் ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா (22). இவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்தார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்கிடையே கிரீஷ்மா, காதலன் ஷாரோன்ராஜை வீட்டுக்கு வரவழைத்து தீர்த்துக் கட்டினார். அதாவது காதலனுக்கு தெரியாமல் கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் அவருடைய உடல்நிலை கொஞ்சம், கொஞ்சமாக மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வித்தியாசமான கொலை சம்பவம் குமரி-கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 25-ந் தேதி ஷாரோன்ராஜ் இறந்தநிலையில் பாறசாலை போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் 30-ந் தேதி போலீசார் கிரீஷ்மாவை வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்றதை ஒப்புக் கொண்டார். தன்னுடைய எதிர்கால திருமண வாழ்க்கைக்கு காதலன் இடைஞ்சலாக இருப்பார் என கருதி அவரை தீர்த்துக் கட்டியது அம்பலமானது.

பின்னர் அவரை போலீசார் கைது செய்து 31-ந் தேதி அன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நெடுமங்காடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கழிவறையில் கிருமிநாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றதால் அவர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே தடயங்களை அழித்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்ததால் கிரீஷ்மாவிடம் மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தவில்லை.

பின்னர் கிரீஷ்மா உடல்நிலை தேறியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர் அட்டக்குளங்கரை சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிரீஷ்மாவை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது 7 நாட்கள் கிரீஷ்மாவை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு போலீசாருக்கு அனுமதி வழங்கியது.

மேலும் விசாரணை நடைமுறை மற்றும் கொலை நடந்த இடத்திற்கு கிரீஷ்மாவை அழைத்து சென்று விசாரணை நடத்தும் போது அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அதனை சீலிட்ட கவரில் வைத்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சரோனின் கல்லூரி அமைந்துள்ள நெய்யூர் பகுதிக்கு க்ரீஷ்மாவை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது 2 மாதங்களில் காதலன் சரோனை 10 முறை கொல்ல முயன்றதாக காதலி க்ரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story