குமரி வியாபாரிக்கு கேரளாவில் அபராதம் விதிப்பு
கேரளாவில் விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக குமரி வியாபாரிக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தக்கலை:
கேரளாவில் விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக குமரி வியாபாரிக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாபாரி
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது, வியாபாரி. இவர் கருங்கல் பகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். இவருடைய செல்போனுக்கு கேரள மாநில போக்குவரத்து போலீசாரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் இவருடைய மோட்டார் சைக்கிள் எண்ணை குறிப்பிட்டு 'நீங்கள் கேரள மாநிலம் நெட்டா பகுதியில் ஹெல்மெட் அணியாமல் 3 பேருடன் பயணம் செய்துள்ளீர்கள். அதற்கான அபராத தொகையாக ரூ.1,500 செலுத்த வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் 3 பேருடன் வாகனம் ஓட்டும் கேமரா பதிவையும் அனுப்பி இருந்தனர்.
போலி பதிவு எண்
அந்த பதிவில் உள்ள வாகனத்தின் எண் ஷாகுல் ஹமீதின் வாகனத்தின் எண்ணாக இருந்தாலும், அந்த மோட்டார் சைக்கிள் 'யமஹா எப் இசட்'. ஆனால் இவரிடம் உள்ள மோட்டார் சைக்கிள் ஹோண்டா ஷைன் ஆகும். இதனால் இவருடைய வாகன எண்ணை கேரளாவில் உள்ள நபர்கள் போலியாக பயன்படுத்தியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாகுல் ஹமீது இதுகுறித்து புகார் செய்வதாக கூறினார். கேரளாவில் விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக குமரி வியாபாரிக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.