குமரி மாவட்டம் 97 சதவீதம் தேர்ச்சி
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் குமரி மாவட்டம் 97.05 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 7-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.
நாகர்கோவில்:
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் குமரி மாவட்டம் 97.05 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 7-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.
97 சதவீதம் தேர்ச்சி
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. குமரி மாவட்டத்தில் 10,808 மாணவர்களும், 11,578 மாணவிகளும் என மொத்தம் 22,386 பேர் தேர்வு எழுதினர்.
அவர்களில் 10,269 மாணவர்களும், 11,456 மாணவிகளுமாக மொத்தம் 21,725 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 95.01 சதவீதம் பேரும், மாணவிகள் 98.95 சதவீதம் பேரும் ஆக மொத்தம் 97.05 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குமரி 7-வது இடம்
கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் குமரி மாவட்டம் தமிழக அளவில் 14-வது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 97.05 சதவீதம் பெற்று 7-வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
பிளஸ்-2 தேர்வை ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மாணவர்கள் 39 பேர் எழுதியதில் 36 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 92.31 ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 7342 பேர் எழுதியதில் 7060 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 96.16 ஆகும். இந்து சமய அறநிலையத்துறை பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 19 பேர் தேர்வு எழுதியதில் 18 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 94.74 பேர் ஆகும்.
மெட்ரிக் பள்ளிகள் 99.25 சதவீதம்
பகுதி உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 2157 பேர் தேர்வு எழுதியதில், 2124 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 98.47 ஆகும். சுயநிதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 6,651 பேர் எழுதியதில், 6601 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 99.25 சதவீதம் ஆகும். பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 2 பேர் தேர்வு எழுதியதில் 2 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 100 சதவீதம் ஆகும்.
சமூக நலத்துறை பள்ளி மாணவர்கள் 11 பேர் எழுதியதில் 10 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 90.91 ஆகும். பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 86 பேர் தேர்வு எழுதியதில் 80 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 93.02 ஆகும்.