வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் குமரி மீனவர்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்த குமரி மீனவர்கள் விசைப்படகில் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். குளச்சலில் கரை திரும்பிய மீனவர்கள் தங்கள் விசைப்படகில் இருந்த மீன்களை ஏலமிட்டனர்.
குளச்சல்:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்த குமரி மீனவர்கள் விசைப்படகில் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். குளச்சலில் கரை திரும்பிய மீனவர்கள் தங்கள் விசைப்படகில் இருந்த மீன்களை ஏலமிட்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூர், வெளி மாநிலம் ேபான்றவற்றில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 2 அரசு மீன்பிடித் துறைமுகங்கள், 2 தனியார் மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. இங்கு மீன்பிடித்தொழில் நடந்தாலும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் கேரளா, குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சென்று மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்கள். இவர்கள் திருவிழா, இல்லத்திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் மட்டும் ஊர் திரும்புவது வழக்கம்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால் கேரளா மற்றும் பிற மாநிலங்களுக்கு சென்றுள்ள மீனவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
வியாபாரம் களை கட்டியது
கடந்த 3 நாட்களாக குளச்சல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் ஊருக்கு திரும்பி உள்ளனர். இவர்கள் விசைப்படகு மூலம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்துவிட்டு அந்த பகுதியில் உள்ள கடைகளில் இருந்து குழந்தைகளுக்கு பலகாரம் போன்ற பொருட்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு செல்கிறார்கள். இதனால் குளச்சல் காமராஜர் பஸ் நிலையம், காந்தி சந்திப்பு, பீச் ரோடு, மரமடி சந்திப்பு பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டி உள்ளது.
இவர்கள் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிவிட்டு, மறுநாள் 26-ந் தேதி சுனாமி நினைவு நாளில் சுனாமியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். பின்னர் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த பின்பு மீண்டும் பிற மாநிலங்களுக்கு வேலைக்காக செல்வார்கள்.
ரெட் ரிங் இறால் மீன்கள்
இதுபோல் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளும் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களாக கரை திரும்பிய வண்ணம் உள்ளது. இன்று மாலைக்குள் அனைத்து விசைப்படகுகளும் கரை திரும்பி விடும் என மீனவர்கள் தெரிவித்தனர். நேற்று கரை திரும்பிய படகுகளில் கிளிமீன்கள், சூரை மீன்கள் ேபான்றவை இருந்தன. 2 விசைப்படகுகளில் ரெட் ரிங் எனப்படும் இறால் மீன்கள் இருந்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து ஏலமிட்டனர்.