அமச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
நாமக்கல் அருகே அமச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல் அருகே சின்னமுதலைப்பட்டியில் பிரசித்தி பெற்ற அமச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 4-ந் தேதி கிராம சாந்தி, 5-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகள் நடத்தப்பட்டன. 6-ந் தேதி நாமக்கல் பலப்பட்டரைமாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் முளைப்பாளிகை அழைத்தலும், விமான கோபுர கலசங்கள் நிர்மானம் செய்தலும் நடந்தது. 7-ந் தேதி முற்கால யாக வேள்வி, இரவு கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் காலையில் 2-ம் கால யாகபூஜை, அமச்சி அம்மனுக்கு நவசக்தி பூஜை, மாலையில் 3-ம் காலயாக பூஜை, கும்ப பூஜை, அஷ்டபந்தனம் நடைபெற்றது. நேற்று அதிகாலை 4-ம் காலயாக பூஜை நடந்தது. தொடர்ந்து கோபுர விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் செல்வ கணபதி, பகவதி அம்மன், அமச்சி அம்மன், கன்னிமார்கள், கருப்பணார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.