சாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
தர்மபுரி இலக்கியம்பட்டியில் சாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தர்மபுரி:
தர்மபுரி இலக்கியம்பட்டியில் சாலை மாரியம்மன் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு மூலஸ்தான கோபுரமும் புதிதாக அமைக்கப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. கங்கணம் கட்டுதலும், வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடந்தன. சாலை மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாத்தப்பட்டது. தொடர்ந்து சாமி சிலைகள் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள், பிம்பசுத்தி, நாடிசந்தானம், திரவிய ஹோமம், மகாபூர்ணாகுதி நடந்தது. யாக சாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனிதநீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசம் மற்றும் சாலை மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார சேவை, மகா தீபாராதனை நடந்தது. விழாவிலல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.