மகாசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
மகாசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பு கிராமத்தில் உள்ள மகாசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்துசாந்தி, மிருதீசங்கீரஷனம், அக்குரார்பணம், ரக்ஷா பந்தனம், கடஸ்தாபனம் உள்ளிட்டவை நடந்தது. இரவு முதற்கால யாக பூஜைகளும், பூர்ணாகுதியும், தீபாராதனையும் நடைபெற்றது. நேற்று காலை மங்கள இசை, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 8.35 மணியளவில் மஹா பூர்ணகுதி நடந்தது. யாகசாலையில் இருந்து விமானத்திற்கு கடம் புறப்பாடு நடைபெற்று பின்னர் மூன்று கருடன் வட்டமிட காலை 10.20 மணியளவில் கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் கோட்டையிருப்பு, மாங்குடி, கருப்பூர், திருவுடையார்பட்டி, ரணசிங்கபுரம், திருப்பத்தூர், நாட்டார்மங்கலம் ஆலம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.