காலடி அய்யா சுவாமி, முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கட்டுக்கரை கிராமத்தில் காலடி அய்யா சுவாமி, முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மணமேல்குடியை அடுத்த கட்டுக்கரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற காலடி அய்யா சுவாமி, முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து கோவில் திருப்பணிகள் நடைபெற்றது. இதையடுத்து, 4-ந் தேதி கும்பாபிஷேக யாகசாலை அமைக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
நேற்று காலை 9 மணியளவில் நெற்குப்பம் இ.ஏகாம்பரம் சேர்வைகாரர் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் இணைந்து மேள வாத்தியங்களுடன் சீர்வரிசை எடுத்து வந்தனர்.
பின்னர் யாகசாலையில் விசேஷ சாந்தி, நாடி சந்தானம், மகா பூர்ணா ஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து சென்று காலை 10.15 மணியளவில் கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை நெற்குப்பம் இ.ஏகாம்பரம் சேர்வைகாரர் குடும்பத்தினர் மற்றும் கட்டுக்கரை கிராமத்தினர் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். முன்னதாக இ.ஏகாம்பரம் சேர்வைகாரர் குடும்பத்தினருக்கு கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.