பெத்தனப்பள்ளியில் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்-பெண் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
பெத்தனப்பள்ளியில் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பெண் பக்தர்கள் பால்குட ஊர்வலம் சென்றனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்தனப்பள்ளி கிராமத்தில், மகா முனீஸ்வரர், ஜடா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு கணபதி பூஜை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மஹா கணபதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தீபாராதனையும், மாலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து முனீஸ்வரனுக்கு மூல மந்திர ஹோமம், தீபாராதனைநடந்தன.
நேற்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், கும்பங்களுக்கு விசேஷ அர்ச்சனை, மகா தீபாராதனை, கலசங்கள் யாக சாலையில் இருந்து புறப்படும் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து மகா முனீஸ்வரர் மற்றும் ஜடா முனீஸ்வரர் சிலைக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8 மணிக்கு 300-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பால் குடங்களை எடுத்துக்கொண்டு, திருவண்ணாமலை சாலை, ராசுவீதி, ரவுண்டானா, பழையபேட்டை, நேதாஜி சாலை வழியாக சென்று கோவிலை அடைந்தனர்.
அங்கு மகா முனீஸ்வரனுக்கும், ஜடா முனீஸ்வரனுக்கும் பால் அபிஷேகம் செய்தனர். மாலை 3 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.