சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு நேற்று 2-ம் கால யாக பூஜை நடந்தது.
சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு நேற்று 2-ம் கால யாக பூஜை நடந்தது.
சுகவனேசுவரர் கோவில்
சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து ரூ.1 கோடியே 7 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பணிகள் முடிவடைந்து நாளை (புதன்கிழமை) காலை 10.50 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலில் நேற்று முன்தினம் முதல் கால யாக பூஜை தொடங்கியது.
தொடர்ந்து நேற்று காலை 2-ம் கால யாகபூஜை நடந்தது. மூலமந்த்ராதி ஹோமம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், அதன்பிறகு சொர்ணாம்பிகை, உடனுறை சுகவனேசுவரருக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
நாளை கும்பாபிஷேகம்
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 4-ம் கால யாகபூஜையும், மாலையில் 5-ம் கால யாக பூஜையும், நாளை (புதன்கிழமை) காலையில் 6-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. காலை 6 மணிக்கு அனைத்து பரிவார கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும், தொடர்ந்து அனைத்து பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், 10.50 மணிக்கு ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.
இதையடுத்து சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு கும்பாபிஷேகம் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.