திருப்பத்தூர் ஓங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


திருப்பத்தூர் ஓங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

திருப்பத்தூர் காந்திபேட்டையில் உள்ள ஓங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் காந்திபேட்டையில் உள்ள ஓங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஓங்காளியம்மன் கோவில்

திருப்பத்தூர் டவுன் காந்தி பேட்டையில் 100 வருடம் பழமை வாய்ந்த ஓங்காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. அன்று மங்கல இசை, விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜை, தனபூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

தொடர்ந்து வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ஓங்கார கணபதி, ஓங்காளியம்மன், துர்க்கை, நாகாலம்மன், பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல், தீபாராதனை நடைபெற்றது. நேற்று அம்மன் அழைத்தல், மங்கல இசை, விநாயகர் பூஜை, சுதர்ஸன ஹோமம், லட்சுமி ஹோமம், தீபாராதனை, தீர்த்த சங்க்ரஹனம் (புனித நீர் எடுத்து வருதல்) அக்னி சங்க்ரஹனம் (சூரியனிடமிருந்து அக்னி எடுத்தல்) நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

கற்பக விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்ததும் முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, நாதம் வேதம், கீதம், தீபாராதனை, பிரசாதம் வினியோகம் நடைபெற்றது. 4-ஆம் கால யாக பூஜை, ஹோமம், தம்பதி சங்கல்பம், மஹா பூர்ணாஹுதி நடைபெற்று கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது.

அப்போது கூடியிருந்த பக்தர்கள் பராசக்தி, மாரியம்மா, ஓங்காளியம்மா என பக்தி கோஷம் எழுப்பினர். சில பெண்கள் சாமி வந்து ஆடினர்கள்.

தொடர்ந்து ஓங்கார கணபதி, துர்க்கை, பரிவார தேவதை, ஓங்காளியம்மன் மற்றும் நாகாலம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருக்கல்யாணம்

பின்னர் ஓங்காளியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று மஹா தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் நகராட்சி கவுன்சிலர் கவுரி ஐயப்பன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், முன்னாள் நகராட்சி தலைவர் அரசு, தி.மு.க. அவைத் தலைவர் ஸ்ரீதர், அரசு வழக்கறிஞர் பி.டி.சரவணன், அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் டாக்டர் லீலா சுப்ரமணியம், ரோட்டரி சங்க தலைவர் பி.அருணகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

நேற்று 'சக்தி பிறப்பு' எனும் தெருக்கூத்து நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை தி.மு.க. நகர இளைஞரணி துணை அமைப்பாளர் இ.ஐயப்பன், கே.எம்.டி.சுபாஷ், பி.முருகன், டி.எஸ்.கிரி, மா.திருநாவுக்கரசு, வி.மேகநாதன், எம்.திருநாவுக்கரசு மற்றும் திருப்பத்தூர் காந்தி பேட்டை ஓங்காளியம்மன் கோவில் பரம்பரை தர்மகர்த்தாக்கள், இளைஞர் அணியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story