நவகிரகங்களுக்கு கும்பாபிஷேகம்
தியாகதுருகம் அருகே நவகிரகங்களுக்கு கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் ஊராட்சிக்குட்பட்ட பொறையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொறையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் புதிதாக நவகிரகங்களை அமைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்கான பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்ததை அடுத்து கும்பாபிஷேக பணி தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை சிவனடியார் அய்யப்பன் தலைமையில் சிவனடியார்கள் கலந்துகொண்டு திருநெறி தீந்தமிழில் விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 2-வது கால யாக பூஜை நடைபெற்று காலை 8:40 மணியளவில் மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு, ஆலயத்தை வலம் வந்து, நவகிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து மூலவர் பொறையம்மன் மற்றும் விநாயகர், முருகன், மருதாண்டவர், சப்தகன்னிமார்கள் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.