பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் 6-ந் தேதி கும்பாபிஷேகம்


பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் 6-ந் தேதி கும்பாபிஷேகம்
x

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த நூற்றாண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தநிலையில் கோவில்கள் சிதிலமடைந்ததால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலை சீரமைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையொட்டி தொழில் அதிபர் டத்தோ.பிரகதீஷ் குமார் உதவியுடன் திரவுபதி அம்மன் கோவில், ராஜகோபுரம், செல்வ விநாயகர் கோவில், தர்மராஜா சுவாமி கோவில், அரவான் சுவாமி கோவில், போத்த ராஜா சுவாமி கோவில், கிருஷ்ணர் கோவில், பலி பீடம் மற்றும் கொடி மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைபாடுகளுடன் கோவில் திருப்பணிகள் நடைபெற்றது.

திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி இன்று (திங்கட்கிழமை) இளங்காளியம்மன் சக்தி அழைக்கும் இடத்திலிருந்து 126 தீர்த்த குடங்கள் மற்றும் 251 முளைப்பாரிகளை பக்தர்கள் எடுத்துக் கொண்டு மங்கள இசையுடன் யாகசாலைக்கு வர உள்ளனர். அதனை தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) 2-ம் கால பூஜை, 3-ம் கால பூஜை நடைபெறுகிறது. 6-ந் தேதி அதிகாலை 4-ம் கால பூஜை, பூர்ணாஹூதி, கும்பங்கள் புறப்பாடு ஆகியவைகள் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி காலை 6.45 முதல் 7.25 மணிக்குள் தொழில் அதிபர் பிரகதீஷ் குமார் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க நடைபெற உள்ளது. தொடர்ந்து சுவாமிகளுக்கு தீபாராதனை நடைபெறுகிறது. மேலும் கும்பாபிஷேக விழாவையொட்டி பூலாம்பாடி பகுதியில் 6 இடங்களில் அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தொழில் அதிபர் பிரகதீஷ் குமார் மற்றும் கிராமமக்கள் செய்து வருகிறார்கள்.


Next Story