பத்மாவதி தாயார் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள பத்மாவதி தாயார் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து வெகுவிமர்சையாக இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.
சென்னை,
சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவருடைய குடும்பத்தினர் தானமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கிய இடத்தில் பத்மாவதி தாயார் கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.10 கோடி மதிப்பில் கட்டி உள்ளது. இந்த கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணியில் இருந்து 7.44 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த 12-ந்தேதியில் இருந்து சிறப்பு பூஜைகளும், ஓமங்களும் நடந்து வருகிறது. அந்தவகையில் பத்மாவதி தாயார் சிலை கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யும் விழா நேற்று காலை 9 மணிக்கு நடந்தது.
இந்த கோவிலுக்கு தேவையான சிலைகள், திருப்பதியில் வடிக்கப்பட்ட பத்மாவதி தாயார், துவாரபாலகர்களான வனமாலி, பலாஹினி சிலைகள், மூல விக்ரஹங்கள், கலசங்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. மூலவர் பத்மாவதி தாயார் சிலை 3 நாட்கள் நெல் தானியத்திலும், தண்ணீரிலும், 2 ஆயிரம் லிட்டர் பாலிலும் அபிஷேகம் செய்யப்பட்டது.
கருவறையில் பிரதிஷ்டை
அதைத்தொடர்ந்து நேற்று காலையில் 4½ அடி உயரம், 3½ அடி அகலத்திலான பத்மாவதி தாயார் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான சதுஸ்தனா அர்ச்சனா பூஜை, மூர்த்தி ஓமம், நேற்று காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை நடந்தது. காலை 9 மணியில் இருந்து 9.30 மணிக்குள் தாயார் சிலை கருவறைக்கு கொண்டு சென்று அங்கு அஸ்தபந்தன பூஜைகள் செய்யப்பட்டு பத்மாவதி தாயார் பிரதிஷ்டை நடந்தது.
பத்மாவதி தாயார் கருவறையில் நிறுவப்பட்டதை தொடர்ந்து திருப்தி கோவிலில் உள்ள ஆகம விதிப்படி அனைத்து சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டன. தொடர்ந்து காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தாயாருக்கு பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன.
மீன லக்னத்தில் கும்பாபிஷேகம்
தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை சதுசதனா அர்ச்சனை தாயாருக்கு நடக்கிறது. 5 மணி முதல் 6 மணி வரை மகா சாந்தி ஹோமம் பூர்ணாஹூதி, 6 மணி முதல் 6.30 மணி வரை கும்ப உத்தப்பன, 7 மணி முதல் 7.15 மணிவரை ஆலய பிரதக்க்ஷனா, 7.15 முதல் 7.30 மணி வரை சம்பாத்ஜய சபர்ஷனம், 7.30 மணி முதல் 7.44 மணிக்குள் மீன லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
விமான கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. 10 மணி முதல் 11 மணி வரை பத்மாவதி தாயார்-சீனிவாசா திருக்கல்யாணம் நடக்கிறது. 11 மணி முதல் 11.30 மணி வரை ஆச்சர்யா, ரித்விக் பரிச்சார்கா மர்யாடா போன்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
மடாதிபதிகள்
கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, விசாகப்பட்டினம் சாரதா பீடம் ஸ்ரீஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீசுவாத் மனேந்திரா சரஸ்வதி சுவாமிகள், தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், ஆன்மிகவாதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சீனிவாச பெருமாள் கோவிலை கட்டி உள்ளது. ஆனால் நாட்டிலேயே முதன் முறையாக ஆந்திர மாநிலத்தை விட்டு, பிற மாநிலமான தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் பத்மாவதி தாயாருக்கு தனி கோவிலை கட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
காலை 11 மணிக்கு தரிசனம்
கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 11 மணிக்கு பொதுமக்கள் பத்மாவதி தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கூட்டத்தை சமாளிக்க இரும்பு தடுப்பு வேலி அமைத்து ஒரு வரிசையில் உள்ளே செல்லவும் மற்றொரு வரிசையில் வெளியே வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சாம்பார் சாதம், ரச சாதம், தயிர் சாதம், இனிப்பு பொங்கல், வெஜ் பிரியாணி ஆகிய உணவு வகைகள் 3 வேளையும் வழங்கப்படுகிறது. பக்தர்கள் சாப்பிடுவதற்கு வசதியாக கோவிலுக்கு எதிரே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அன்னதானம் இடைவிடாமல் வழங்கப்படுகிறது. அத்துடன் பக்தர்களுக்கு இலவசமாக 15 ஆயிரம் திருப்பதி லட்டு வழங்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தாயார் கோவிலில் இருந்து புறப்பட்டு ஜி.என்.செட்டி ரோடு, வடக்கு போக் சாலை, விஜயராகவாச்சாரியார் சாலை, டாக்டர் நாயர் ரோடு வழியாக சென்று மீண்டும் திருமாட வீதியை அடையும் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலையில் ஜி.என்.செட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தை மாற்றிவிடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. காலையில் இருந்து இரவு வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் போக்குவரத்தை சீர் செய்ய போலீசாரும் அங்கு குவிக்கப்படுகிறார்கள். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக்குழுத்தலைவர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.