அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
பல்லடத்தில் உள்ள புகழ்பெற்ற அங்காளம்மன் கோவிலில் 48-வது ஆண்டு குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
அங்காளம்மன் கோவில்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமான இந்த அங்காளம்மன் கோவிலில் 48-ம் ஆண்டு குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன்படி திருவிழா கடந்த 17-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கொடியேற்றம், யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலை அக்னி குண்டம் வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 2 அடி அகலம், 45 அடி நீளம் கொண்ட குண்டத்தில், வேப்பமரக்கட்டைகளை போட்டு அக்னி வளர்க்கப்பட்டது. சுமார் 10 மணி நேரம் அக்னி வளர்த்து குண்டம் தயார் செய்யப்பட்டது.
இதைத்்தொடர்ந்து நேற்று காலை 7 மணி முதல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கோவில் பூசாரிகள் மற்றும் நிர்வாகிகள் குண்டத்தில் இறங்கினர். பின்னர் ஓம்சக்தி, பராசக்தி, என்று கோஷமிட்டபடி கைக்குழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தி அங்காளம்மனை வழிபட்டனர்.
காலை 8 மணிக்கு அக்னி அபிஷேகம், பொங்கல் வைத்தல், பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. குண்டம் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு கொடி இறக்குதல், மகா அபிஷேகம், மாலை 6 மணிக்கு வசந்த விழா மற்றும் நள்ளிரவு பேச்சியம்மன் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
அன்னதானம்
குண்டம் திருவிழாவை முன்னிட்டு முப்பெரும் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பல்லடம் வேன் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
குண்டம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பல்லடம் போலீசார் செய்திருந்தனர்.