தொடர் மழையால் குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு; சஞ்சீவராயன் குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
தொடர் மழையால் குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. சஞ்சீவராயன் குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
டி.என்.பாளையம்
தொடர் மழையால் குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. சஞ்சீவராயன் குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
குண்டேரிப்பள்ளம் அணை
டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் பகுதியில் குன்றி மலையடிவாரத்தில் 42 அடி உயரத்தில் 1980-ஆம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர், மல்லியம்மன் துர்கம், உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீரும், 10-க்கும் மேற்பட்ட காட்டாற்று வெள்ளமும் நீர்வரத்து ஆதாரங்களாகும். குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், இந்திராநகர், மோதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் குண்டேரிப்பள்ளம் அணை தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
உபரிநீர் வெளியேற்றம்
இந்தநிலையில் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தது.
குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர், மல்லியம்மன் துர்கம், உள்ளிட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் இருந்து அதிகாலை வரை பெய்த கனமழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு ஒரே நாளில் 674 கனஅடி நீர் வந்தது. ஏற்கனவே அணை நிரம்பி இருந்ததால் 674 கன அடி தண்ணீரும் உபரிநீராக வெளியேற்றப்பட்டது.
குண்டேரிப்பள்ளம் பகுதியில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 79.6 மி.மீ அளவு மழை பெய்துள்ளது.
சஞ்சீவராயன் குளம்
இதேபோல் டி.என்.பாளையம் ஒன்றியம் பெருமுகை ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பளவில் சஞ்சீவராயன் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் நீர்பிடிப்பு பகுதிகளான கரும்பாறை, தொட்டகோம்பை உள்ளிட்ட வனப்பகுதியில் கடந்த நில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அணை நிரம்பியது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பெய்த கனமழை காரணமாக சஞ்சீவராயன் குளத்திற்கு வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் உபரிநீர் வெளியேறிக்கொண்டு இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்தால் நீர்வரத்து அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.