குப்பை சேகரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு


குப்பை சேகரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு
x
திருப்பூர்


குப்பை சேகரிக்கும் பணிகளை தனியார்வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் நிலவியது. தி.மு.க. தவிர அனைத்து கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அங்கு 30 மருந்து பணியாளர்கள், 126 சுகாதாரப் பணியாளர்கள், 22 குடிநீர் பணியாளர்கள் என மொத்தம் 178 தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் 8 நிரந்தர பணியாளர்களும் அங்கு பணியில் உள்ளனர்.

இந்த நிலையில் திருமுருகன்பூண்டியில் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் பணிகளை 3 ஆண்டுகளுக்கு தனியார் மூலமாக மேற்கொள்ளும் தமிழக அரசின் அரசாணை கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சியில் இதை தீர்மானமாக நிறைவேற்றுவது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் குமார் தலைமை தாங்கினார். கமிஷனர் அப்துல் ஹாரிஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குப்பை சேகரிக்கும் பணிகளை தனியார்வசம் ஒப்படைக்கும் தீர்மானம் தொடர்பாக தலைவர் குமார் பேசிய தொடங்கிய உடன், தி.மு.க. தவிர அனைத்து கட்சி கவுன்சிலர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூச்சல்-குழப்பம்

தனியார்வசம் ஒப்படைத்தால் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதை தொடர்ந்து 11-வது வார்டு கவுன்சிலர் லதாசேகர் தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்களும், துணைத்தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்களும், 10-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியம் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்களும் தீர்மானத்தை எதிர்த்து கோஷம் எழுப்பியபடியே கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அ.தி.மு.க., மா.கம்யூனிஸ்டு, இ.கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் நிருபர்களிடம் கூறும்போது " குப்பை சேகரிக்கும் பணிகளை தனியார்வசம் ஒப்படைத்தால் நகராட்சியில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த அரசாணையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர். ஆனாலும் நகராட்சி கவுன்சிலர்கள் 27 பேரில் தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேர் பெரும்பான்மையாக இருந்ததால் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கூட்டத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கூட்டத்திற்கு வந்திருந்தனர். திருமுருகன்பூண்டி நகராட்சியின் அவசர கூட்டத்தில் இருந்து தி.மு.க. தவிர அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story