சாலை ஓரம் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
மடத்துக்குளத்தையடுத்த ஜோத்தம்பட்டி பகுதியில் சாலை ஓரம் குப்பைகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணியாளர்கள் குப்பை வண்டிகளை அங்கேயே நிறுத்தி விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை
பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் தினசரி அதிக அளவில் குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகளை கையாள்வது உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு சவாலான விஷயமாக உள்ளது. இவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மறு சுழற்சிக்கும் பயன்படுத்தும் வகையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலான ஊராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழுமையாக முடங்கியுள்ளது.
போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததும், பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாததும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலையில் மடத்துக்குளம் ஒன்றியம் ஜோத்தம்பட்டி ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலை உள்ளது. இதனால் ஆங்காங்கே சாலை ஓரங்களில் குப்பைகள் குவித்து வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த குப்பைகளுக்கு தீ வைத்து கொளுத்தி விடுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடுகள், காற்று மாசு, சுவாசக் கோளாறுகள் என பல பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்ளும் நிலை உள்ளது.
தீ விபத்து
இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜோத்தம்பட்டி ஆஸ்பத்திரி மேடு பகுதியில் சாலை ஓரத்தில் குவித்து வைக்கப்பட்ட குப்பைகளை தீ வைத்து கொளுத்திய போது ஏற்பட்ட தீ விபத்தில் ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் கரும்புப் பயிர்கள் மற்றும் பாசனக்குழாய்கள் எரிந்து நாசமானது. அவருக்கு இழப்பீடு எதுவும் கிடைக்காத நிலையில் அந்த இடத்தில் மீண்டும் குப்பைகளை கொட்ட மாட்டோம் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை 2 பேட்டரி வாகனங்களில் குப்பைகளைக்கொண்டு வந்த ஊராட்சி பணியாளர்கள் அதே பகுதியில் குப்பைகளைக் கொட்ட முயற்சி செய்துள்ளனர்.
அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 2 வாகனங்களையும் குப்பையுடன் அப்படியே நிறுத்தி விட்டு பணியாளர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். மாலை வரை வாகனங்களை எடுப்பதற்கு யாரும் வராததால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளனர். மீண்டும் இந்த பகுதியில் குப்பைகளை கொட்ட அனுமதிக்க மாட்டோம் என்று விவசாயிகள் உறுதியாக தெரிவித்தனர்.