குட்டை திடலில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள்
உடுமலை குட்டை திடலில் கிளை நூலகம் எண்-1, வணிக வளாகங்கள், நாராயணகவி மணிமண்டபம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. நாராயணகவி மணிமண்டபம் மற்றும் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாசிப்பதற்கு நாள்தோறும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அது மட்டுமின்றி போட்டி தேர்வு தயாராகும் மாணவ மாணவிகளும் நாள்தோறும் வந்து புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை படித்து குறிப்புகள் எடுத்து தேர்வுகளை சந்தித்து வருகின்றனர். இதனால் நூலகம் காலை முதல் மாலை வரையிலும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் நூலகம் மற்றும் நாராயணகவி மணி மண்டபத்தின் காம்பவுண்டு சுவற்றை ஒட்டியவாறு குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த குப்பைகள் நகர பகுதியில் சேகரிக்கப்பட்டு குவித்து வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி ஒரு சிலர் இயற்கை உபாதைகளை கழித்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் வாசிப்பதற்காக வருகின்ற பொதுமக்களும் போட்டித்தேர்வு தயாராகின்ற மாணவர்களும் உடல் நலக்கோளாறுகளால் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் வணிக வளாக கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் சேவைகளை பெறுவதற்காக வருகின்ற பொதுமக்களும் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
எனவே குட்டை திடலில் உள்ள நூலகம் மற்றும் நாராயணகவி மணி மண்டபத்தின் அருகே குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.