குருமலை வனப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
குருமலை வனப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
தளி,
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், குளிப்பட்டி, குருமலை, மாவடப்பு உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் சார்பில் ஒரு சில அத்தியாவசிய அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டாலும் அது முழுமையாக பூர்த்தி அடையாத சூழலே உள்ளது. இந்த சூழலில் உடுமலை வனச்சரகம் தளி பேரூராட்சிக்கு உட்பட்ட குருமலை வனப்பகுதியில் கட்டப்பட்டிருந்த பள்ளிக்கூடம் சேதமடைந்தது. இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் நிலவியது.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் நேற்று உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குருமலை குடியிருப்புக்கு அருகில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதனால் குழந்தைகள் பாதுகாப்பான முறையில் கல்வி கற்பதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளதால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.