குருபவானிகுண்டா கிராமத்தை குற்றம் இல்லாத கிராமமாக மாற்ற வேண்டும்
தமிழக ஆந்திர எல்லையில் உள்ள குருபவானிகுண்டா கிராமத்தை குற்றம் இல்லாத கிராமமாக மாற்ற வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள குருபவானிகுண்டா கிராமத்தை குற்றமில்லா கிராமமாக மாற்ற வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
விழிப்புணர்வு கூட்டம்
தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் உள்ள குருபவானிகுண்டா கிராமத்தில் சாராய விற்பனை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்காக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
தகவல் தெரிவிக்க வேண்டும்
கிராம பகுதியில் நடைபெறும் எந்த குற்றங்கள் ஆனாலும் உடனடியாக தகவல் தெரிவிப்பதற்காக இதே பகுதியில் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். எந்த தகவல் ஆனாலும் இவரிடம் தெரிவிக்கலாம். அதே போல மற்ற துறைகளின் மூலம் ஏதாவது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது குறித்து தெரிவித்தால் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் வெளியூர் வேலைக்கு செல்பவர்கள் வீடுகளை பூட்டி விட்டு செல்ல வேண்டும். பூட்டிய வீட்டின் சாவியை அதே பகுதியில் எங்காவது ஓரிடத்தில் வைத்து விட்டு செல்லக் கூடாது. அடையாளம் தெரியாத நபர்களிடம் ஏ.டி.எம். ரகசிய எண்ணை தெரிவிக்கக் கூடாது. பெண்கள் தொடர்பான பிரச்சினைகள், திருட்டு, சாராயம் ஆகியவற்றை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வேண்டும். இத்தகைய நிலை ஏற்பட்டால் தான் இந்த கிராமம் குற்றம் இல்லாத கிராமமாக மாறும் இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜன், தாலுகா இன்ஸ்பெக்டர் அருண்குமார், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஆலங்காயம் இன்ஸ்பெக்டர் பழனி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், போலீசார் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.