குறவர் இன மக்கள் தொடர் முழக்க போராட்டம்
தேனியில், அமைச்சரை கண்டித்து குறவர் இன மக்கள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி அல்லிநகரம் வள்ளிநகர் பகுதியில் வசிக்கும் குறவர் இன மக்கள் அப்பகுதியில் உள்ள திட்டச்சாலைக்கு நேற்று மாலை 6 மணியளவில் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென பந்தல் அமைந்து அமர்ந்தனர். பின்னர் அவர்கள் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை கண்டித்து தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், "நரிக்குறவர் நல வாரியத்தில் குறவர் என்பதை நீக்க வேண்டும். குறவர் என்ற எங்களின் இனத்தின் பெயரை பிற சமூகத்தினரின் பெயரோடு இணைத்து பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கைகள் தொடர்பாக வனவேங்கைகள் கட்சி சார்பில் ராஜபாளையத்தில் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் கட்சியின் நிறுவன தலைவர் இரணியன், சென்னையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் மனு கொடுக்க சென்ற போது அவரை அமைச்சர் அவமரியாதை செய்துள்ளார். இதனால் அமைச்சரை கண்டித்தும், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டத்தை தொடங்கி உள்ளோம்" என்றனர். தொடர்ந்து அவர்கள் அமைச்சரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இரவிலும் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர்.