வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் ஆலோசனை கூட்டம்
தாராபுரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அரசியல் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை தாமாக முன்வந்து இணைக்க வேண்டும். அந்தவகையில் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அரசியல் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. குமரேசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது இதுதொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் தங்களுடைய கருத்துகள், விவாதங்களை முன்வைத்தனர். அதற்கு ஆர்.டி.ஓ. குமரேசன் பதிலளித்து பேசினார்.
சிறப்பு முகாம்கள்
அரசியல் கட்சி பிரதிநிதிகள் சிலர், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது மிக கவனமுடன் அதை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் வைத்தனர். வாக்காளர் அட்டையில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2023, இந்த திருத்த காலத்தில் இருந்து 17 வயதுக்கு மேற்பட்டவர்களும் வாக்காளராக பெயர் சேர்க்க முன்னதாகவே மனு அளிப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது. மேலும் செப்டம்பர் மாதத்தில் 4-ந் தேதியில் இருந்து இதுதொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
அப்போது அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் டி.டி.கே.காமராஜ், தி.மு.க. நகர அவைத் தலைவர் கதிரவன், பா.ஜ.க. கூட்டுறவு மாநில பிரிவு சுகுமார், பா.ஜ.க. மாநில இளைஞர் அணி செயலாளர் யோகேஸ்வரன், கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் கனகராஜ், மற்றும் கன்னங்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன், என அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.