மத்திய, மாநில அரசின் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்
மத்திய, மாநில அரசின் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவர் சுப்பராயன் எம்.பி. உத்தரவிட்டார்.
ஆய்வுக்கூட்டம்
திருப்பூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று மதியம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கண்காணிப்புக்குழு தலைவர் சுப்பராயன் எம்.பி. தலைமை தாங்கி ஆய்வு மேற்கொண்டார்.
மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத், எம்.பி.க்கள் பி.ஆர்.நடராஜன்(கோவை), கணேசமூர்த்தி(ஈரோடு), சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பணிகளை விரைந்து முடியுங்கள்
கூட்டத்தில் சுப்பராயன் எம்.பி. பேசியதாவது:-
அரசின் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு வந்துள்ள மத்திய, மாநில அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி அதில் காலதாமதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டப்பணிகளை மேற்கொள்ளும்போது பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டால் அதை உடனடியாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்து தீர்வு கண்டு பணிகளை முடிக்க வேண்டும். மத்திய, மாநில அரசு திட்டங்களை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சிகள் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ரூ.83¾ லட்சம் கடன் உதவி
பின்னர் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.83¾ லட்சம் மதிப்பில் பெருங்கடன் உதவிகளை சுப்பராயன் எம்.பி. வழங்கினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.