அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், அனைத்து துறை சார்ந்த திட்டப்பணிகள் செயலாக்கம் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் ஊராட்சி தலைவர் தலைமையில் நேற்று நடந்தது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 38 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு ஊராட்சியிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில ்2021-2022-ம் ஆண்டிற்கு மொடக்குபட்டி, ஆண்டியகவுண்டனூர், கல்லாபுரம், ஜல்லிபட்டி, குருவப்பநாயக்கனூர், சின்னகுமாரபாளையம், தீபாலபட்டி ஆகிய 7 ஊராட்சிகளும், 2022-2023-ம் ஆண்டிற்கு கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், ஜே.என். பாளையம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, தின்னப்பட்டி, வடபூதிநத்தம், ஆலாம்பாளையம்ஆகிய 8 ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கணக்கம்பாளையம் ஊராட்சி
இந்த நிலையில் உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23-க்கு ரூ.68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த திட்டத்திலான பணிகளை தேர்வு செய்து செயல்படுத்த அனைத்து துறை சார்ந்த திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் லதா என்கிற காமாட்சி அய்யாவு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மண்டல துணைவட்டாரவளர்ச்சி அலுவலர் சாந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செல்வராஜ், மகளிர் திட்டவட்டாரஒருங்கிணைப்பாளர் பத்மபிரியா, கணக்கம்பாளையம் ஊராட்சி மகளிர் குழு கூட்டமைப்பு கிராம வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர் ஆர்.தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள், ஊராட்சி பகுதியில் செய்யப்பட வேண்டிய தார் சாலை, கான்கிரீட் சாலை, ரேஷன்கடை பணிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். மனுக்களையும் கொடுத்தனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.
12 ஊராட்சிகளில் கூட்டம்
உடுமலை ஒன்றியத்தில் இந்த திட்டம் குறித்து ஏற்கனவே 12 ஊராட்சிகளில் கூட்டம் நடைபெற்று விட்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீபாலபட்டி ஊராட்சியிலும், நாளை (புதன்கிழமை) குறிஞ்சேரி ஊராட்சியிலும் இதுபோன்றகூட்டம் நடக்கிறது.
இந்த திட்டத்தில் இந்த ஒன்றியத்தில் 2023-2024-ம் ஆண்டிற்கு 8 ஊராட்சிகளும், 2024-2025-ம் ஆண்டிற்கு 8 ஊராட்சிகளும், 2025-2026-ம் ஆண்டிற்கு 7 ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டு, இந்த ஊராட்சி பகுதிகளில் மக்கள் தொகை உள்ளிட்ட சர்வே பணிகள் ஆன்லைன் மூலம் நடந்துவருகிறது.