சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவினர் ஆய்வு
திருப்பூரில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
உறுதிமொழிக்குழுவினர் ஆய்வு
தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருமுருகன்பூண்டியில் ரூ.1 கோடியே 30 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் போலீஸ் நிலைய கட்டிடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக்காட்சி மூலமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட திருப்பூரில் உள்ள கலைஞர் பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விளையாட்டு அரங்கம்
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் குமார் நகரில் ரூ.2 கோடியே 23 லட்சத்தில் கட்டப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தையும், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் ரூ.9 கோடியில் திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்ட தரைத்தளம், முதல் தளம், ஓடுதளம், பார்வையாளர் அரங்கம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர்.
கொங்கணகிரி பகுதியில் வீட்டுமனைப்பட்டா கோரிக்கை தொடர்பாகவும், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ரூ.8 கோடியே 34 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தனர். கோர்ட்டு வளாகம் அருகே திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆய்வுக்கூட்டம்
பின்னர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் உதயசூரியன் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் 120 உறுதிமொழிகள் குறித்தும், பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் சட்டபேரவை அரசு உறுதிமொழிக்குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் க.செல்வராஜ் (திருப்பூர் தெற்கு), மகாராஜன் (ஆண்டிப்பட்டி), சின்னப்பா (அரியலூர்), ஜெயராமன் (சிங்காநல்லூர்), அர்ஜூணன் (திண்டிவனம்), தேவராஜ் (ஜோலார்பேட்டை), திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், தலைமை செயலக செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் கருணாநிதி, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.