ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது


ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது
x

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

தொழிலாளர் உதவி ஆய்வாளர்

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 37). இவர் திருச்சியில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். அதன்படி திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு பிரபல தொழில் நிறுவனத்திற்கும் ஆலோசகராக உள்ளார். அந்த நிறுவனத்தை கடந்த மாதம் 15-ந்தேதி தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆய்வு செய்தார்.

பின்னர் அந்த நிறுவனத்தில் ஆவணங்களை முறையாக பராமரிக்கவில்லை என்று எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து ஆலோசகர் மனோகரன், அந்த நிறுவனத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது என்று கூறி, ஆவணங்களின் நகல்களை தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.

ரூ.15 ஆயிரம் லஞ்சம்

அப்போது தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக், திருச்சியில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் எங்களை முறையாக கவனித்து விடுகிறார்கள். ஆனால் உங்கள் நிறுவனத்தில் இருந்து மட்டும் எங்களை கவனிக்காமல் உள்ளீர்கள். நாங்கள் நினைத்தால் உங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் அபராதம் விதிக்கலாம் என்றும், ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுங்கள், உங்களுக்கு பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன், அந்த நிறுவனத்திடம் அனுமதி பெற்று, தன்னிடம் லஞ்சம் கேட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார்.

கைது

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி, நேற்று மாலை 4 மணியளவில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் ரூ.15 ஆயிரத்தை மனோகரன் வழங்கினார். அந்த பணத்தை கார்த்திக் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரைந்து வந்து அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story