தொழிலாளர் நலன் காக்கும் இயக்கமாக தி.மு.க. திகழ்கிறது


தொழிலாளர் நலன் காக்கும் இயக்கமாக தி.மு.க. திகழ்கிறது
x

தொழிலாளர் நலன் காக்கும் இயக்கமாக தி.மு.க. திகழ்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சேலம்

சேலம்

தொழிலாளர் நலன் காக்கும் இயக்கமாக தி.மு.க. திகழ்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

கொடியேற்று விழா

தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தினத்தையொட்டி கொடியேற்று விழா நேற்று சேலம் மெய்யனூரில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நடந்தது. சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி (மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு), மேயர் ராமச்சந்திரன், பார்த்திபன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணி வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கொடியேற்றி மே தின நினைவு சின்னத்திற்கு மலர் வளையம் வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மே தின பூங்கா

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான், மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடள் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 36 அமைப்பு சாரா நல வாரியங்கள் அமைக்கப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில் தான். விவசாய தொழிலாளர்களுக்கு வீடு வழங்கியது, கை ரிக்ஷாவை ஒழித்தது, சங்கம் இல்லாமல் செயல்பட்ட தொழிலாளர்களுக்கு நேரடியாக அரசு திட்டங்கள் வழங்கியது.

தனியார் துறை ஊழியர்களுக்கும், அரசு ஊழியர்கள் போல் பணிக்கொடை வழங்கியது. தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு, மே தின நூற்றாண்டையொட்டி 1990-ம் ஆண்டு சென்னை நேப்பியர் பூங்காவிற்கு மே தின பூங்கா என்று பெயர் சூட்டி அங்கு மே தின நினைவுச்சின்னம் ஆகியவை அமைத்தது முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான். இன்னும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் மே தின பூங்கா அமைத்து இருப்பது திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியான என் தொகுதியில் தான் உள்ளது.

தொழிலாளர் நலன் காக்கும் இயக்கம்

ஒவ்வொரு ஆண்டும் மே தின விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து கொள்வேன். இந்த ஆண்டு சேலத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். கடந்த ஒரு ஆண்டில் அமைப்பு சாரா நலவாரியங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 60 பேருக்கு, ரூ.247 கோடியில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி உள்ளார்.

சமீபத்தில் தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை தொடர்பாக சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டது. அந்த சட்ட முன்வடிவு சில நிபந்தனையுடன் கூடிய தொழிற்சாலைகளுக்கு மட்டும் பொருந்தும் என்று கூறப்பட்டு இருந்தது. இதை சிலர் பல்வேறு விதமாக விமர்சித்தனர். புதிய சட்டத்தை நிறுத்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில், அவர்களது கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில் புதிய சட்டத்தை திரும்ப பெறுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

அதன்படி எப்போதும் தொழிலாளர் நலனை காக்கும் இயக்கமாக தி.மு.க. திகழ்கிறது. தொழிலாளர்களுக்கும், தி.மு.க.வுக்கும் இடையிலான உறவு என்பதை யாராலும் அழிக்க முடியாது. பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும்போது பல்வேறு அணியினர் வரவேற்பு அளித்து இருந்தாலும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் முந்திக்கொண்டு வரவேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இளைஞர் அணி நிர்வாகிகள் நேர்காணல்

தொடர்ந்து சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்காணல் நடைபெற்றது.

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நேர்காணலை நடத்தினார். இதில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story