அரசு பஸ் மோதி தொழிலாளி சாவு
ஆரல்வாய்மொழியில் அரசு பஸ் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் அரசு பஸ் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
ஆரல்வாய்மொழி தாணுமாலையன்புதூரை சேர்ந்தவர் மகராஜன் (வயது46), சுமைதூக்கும் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது அண்ணன் சுப்பிரமணியனின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இந்தநிலையில், சம்பவத்தன்று இரவு 10.48 மணியளவில் மகராஜன் ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலையோரம் படுகாயங்களுடன் கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மகராஜனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகராஜன் பரிதாபமாக இறந்தார்.
அரசு பஸ் மோதியது
இதையடுத்து மகராஜனின் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்காக பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் சம்பவத்தன்று மகராஜன் சாலையோரம் நடந்து செல்லும் போது நாகர்கோவிலில் இருந்து நெல்லையை நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதிய காட்சி பதிவாகி இருந்தது. மோதியதும் பஸ்சை நிறுத்தி டிரைவரும், கண்டக்டரும் இறங்கி மகராஜனை பார்த்தனர். தொடர்ந்து அவருக்கு உதவி ெசய்யாமல் மீண்டும் பஸ்சில் ஏறி புறப்பட்டு சென்றனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.