தூத்துக்குடியில்கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
தூத்துக்குடியில்கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
தூத்துக்குடியில் கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கூலித் தொழிலாளி
தூத்துக்குடி கொடிமரத் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் ராஜேந்திரன் (வயது 37). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 13-ந் தேதி இரவு குடிபோதையில் கதிரேசன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் உள்ள பக்கிள் ஓடையில் தவறி விழுந்துள்ளார். இதில் கால்வாயில் தத்தளித்த அவர் அதிக அளவு கழிவுநீரை குடித்து மூழ்கியதாக கூறப்படுகிறது.
சாவு
அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபிசுஜின் ஜோஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.