மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி; மனைவி படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி; மனைவி படுகாயம்
x

கூடங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். அவருடைய மனைவி படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். அவருடைய மனைவி படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த தொழிலாளி

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அமராவதிவிளையைச் சேர்ந்தவர் தங்கநாடார் மகன் கண்ணன் (வயது 38).

இவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி கவிதாவின் சொந்த ஊரான கூடங்குளம் அருகே ஊரல்வாய்மொழியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

நேற்று மாலையில் கண்ணன் தனது மனைவி கவிதாவுடன் மோட்டார் சைக்கிளில் ஊரல்வாய்மொழிக்கு சென்று கொண்டிருந்தார்.

லாரி மோதியது

கூடங்குளம் அருகே நக்கனேரி வளைவில் சென்றபோது, அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் லாரியின் டயர் ஏறியதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

படுகாயமடைந்த கவிதா உயிருக்கு போராடியவாறு கிடந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாலைமறியல்

இந்தநிலையில், அந்த வழியாக வேகமாக செல்லும் கல்குவாரி லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது என்று கூறி அப்பகுதி மக்கள் மற்றும் கண்ணனின் உறவினர்கள் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் கூடங்குளம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார், தாசில்தார் வள்ளிநாயகம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கண்ணனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து கண்ணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story