தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
ஸ்ரீவைகுண்டம் அருகே குளிக்க சென்ற போது தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே குளிக்க சென்ற போது தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
தொழிலாளி
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவரது மகன் சிவபெருமாள் (வயது 39). கூலித்தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றாா். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடிபார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் செய்துங்கநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தேடும் பணி
கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஒரு மோட்டார் சைக்கிள் நிற்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ஒருவேளை சிவபெருமாள் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இருக்கலாம் என்று கருதிய போலீசார், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் இசக்கி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் வெளியே வந்தனர்.
உடல் மீட்பு
இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் தேடும் பணி நடைபெற்றது. அப்போது புளியங்குளம் ஆற்றில் சிவபெருமாள் உடல் மிதந்தது. அவரது உடலை கைப்பற்றிய தீயணைப்பு துறையினர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் சிவபெருமாள் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது சிவபெருமாள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.