ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.
மனைவியுடன் வசித்து வந்த கந்தசாமி, மனைவி இறந்த பிறகு தனது பென்சன் பணத்தை வாங்கிக்கொண்டு, ஸ்ரீரங்கம் கோவிலில் அன்னதானம் பெற்று, வெள்ளை கோபுரம் பகுதியில் படுத்து தூங்கி வந்தார். இங்கு யாசகம் பெறுபவர்கள், கூலிதொழிலாளர்கள் உள்ளிட்டோரும் படுத்து தூங்குவது வழக்கம்.
கட்டிட தொழிலாளி
அதில் ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கல்யாண சுந்தரம் வீதியை சேர்ந்த முருகேசன் (39) என்பவரும் ஒருவர். இவர் கட்டிட வேலைக்கு சென்று விட்டு இதே பகுதியில் படுத்து தூங்கி வந்தார். கந்தசாமி கோவில் அருகே தங்கி இருந்தாலும் வாரம் ஒருமுறை உய்யகொண்டான் திருமலை பகுதியில் உள்ள தனது மகள் துர்காதேவி வீட்டுக்கு செல்வது வழக்கம்.
கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி தனது மகள் துர்காதேவி வீட்டுக்கு சென்ற கந்தசாமி, தன்னை சாதியை கூறி முருகேசன் திட்டி வருவதாக கூறியுள்ளார். அதற்கு துர்காதேவியும், அவருடைய கணவர் சுப்பிரமணியனும், அவரை தங்களுடன் தங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் அதை கேட்காமல், மீண்டும் ஸ்ரீரங்கத்துக்கே சென்று தங்கி வந்துள்ளார்.
கல்லைப்போட்டு கொலை
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி இரவு கீழ உத்திரை வீதி வெள்ளை கோபுரம் அருகே படுத்து தூங்க இடம்பிடிப்பதில் கந்தசாமிக்கும், முருகேசனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முருகேசன் கந்தசாமியை சாதியை கூறி திட்டியுள்ளார். இதை கந்தசாமி கண்டிக்கவே ஆத்திரம் அடைந்த முருகேசன் அங்கிருந்த சிமெண்டு கல்லை எடுத்து கந்தசாமியின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ஆயுள் தண்டனை
இதைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் நீதிபதி செல்வமுத்துக்குமாரி தீர்ப்பு கூறினார். அதில், கந்தசாமியை கொலை செய்த குற்றத்துக்காக முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.500 அபராதமும், அவதூறாக பேசிய குற்றத்துக்காக 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அத்துடன் இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைதண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து முருகேசனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் கே.பி.சக்திவேல் ஆஜரானார்.